நொடி

எட்டுதலைகளுடன் தேவதை முத்தமிட்டுச்சென்றாள்
அம்மா தனது மூக்குத்தியை
புளியம்பழம் கொண்டு ஒளிரச்செய்தாள்
நண்பன் சிந்தச்சிந்த மெதுவாகக் கப்பேசினோ
கொண்டு வந்து மேசையில் வைத்தான்
ஸ்பானியப் பெண்ணொருத்தி அருகில் வந்து
அவனது தலைகோதிப் போனாள்
சன்னல்களின் ஊடே ஆரஞ்சுச் சூரியன்
கண்ணாடியில் பட்டுத்தெறித்தது
சிறுமியொருத்திக்கு தான் கழித்த சிறுநீரின்சுவை
உப்பெனத் தாயிடம் சொல்லத்தெரிந்திருக்கவில்லை
பச்சைவிளக்கு வரும்முன்பாகப் பாதையில் பாயாதே
எனத் தலையில் இவனுக்குக்
குட்டுவைக்கும் முன்பே ஆழத்தொடங்கிவிட்டான்
அப்பாவின் கட்டப்பட்ட கால்கட்டைவிரல்களினிடுக்கில்
யாரோ கனகாம்பரத்தைச் சொருகியிருந்தார்கள்
நகரச் சதுக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட
நிரூற்றின் படிகளில் இப்போது
இறங்கிச் சில்லெனக் கால் நனைக்கலாம் என்றிருந்தேன்
பிக்காசோவின் மகள் பெயரும் பலோமா
திரைக்கு அப்பால் உளவுத்துறை வாகனம்
கதவு தட்டுவது சுருட்டைமுடி கறுப்புவெள்ளைப் பெண்

நெஞ்சு தடவுகிறாள் சகி
சொற்களைத் துளாவி அழாதே எனும் வார்த்தையுடன்

Comments are closed.