அமேசானின் குரல் – சிகோ மென்டிஸ் : லிங்கராஜா வெங்கடேஷ்

அக்டோபர் 12, 1492ல் கிறிஸ்தோபர் கொலம்பஸ் இன்றைய பஹாமஸ் தீவுக்கூட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குவானானி என்கிற சிறு தீவில் வந்திறங்கினர். இது புதிய உலகத்தின்(New World) தோற்றத்தையும் இதன் தொடர்ச்சியாகப் பின்னாளில் அமேசான் காடுகளில் ஐரோப்பியர்கள் கால் பதித்ததையும் குறித்தது. அமேசான் காடுகளின் வரலாற்றில் மிக முக்கியமான மூன்று கட்டங்களில் முதலாவது மேற்சொன்ன 1492 கொலம்பிய பரிமாற்றத்திலிருந்து(Columbian Exchange) தொடங்குகிறது. போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் பிரேசிலை கிழமேலாகத் துண்டாடினர். டச்சுக்காரர்கள் உள்ளிட்ட பிற ஐரோப்பியர்கள் வடக்கு அமேசான் காடுகளைக் கைப்பற்றியிருந்தனர். இது எண்ணிலடங்க பூர்வகுடிகளின் அழித்தொழிப்பில் முடிந்தது. இரண்டாவதாக வல்கனைசேசன் எனப்படும் கந்தகத்தைக் கொண்டு ரப்பரை கடினப்படுத்தி நிலைநிறுத்தும் தொழில்நுட்பம். இது அமெரிக்காவில் 1839ல் சார்லஸ் குட்இயர் என்பவரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. இந்நிகழ்வு அதுவரையில் இல்லாத அளவு அமேசானின் ரப்பர் உற்பத்தியையும் எற்றுமதியையும் அதிகப்படுத்தியது. மூன்றாவது 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது, மலேசிய உள்ளிட்ட ஆசியநாடுகளின் ரப்பர் தோட்டங்கள் பெருமளவு உற்பத்தியைத் தொட்ட காலகட்டத்தில் அமேசானின் ரப்பர் தொழில் மெதுவாக வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்குகிறது. காடழிப்பு நடவடிக்கைகள் இங்கே கால்நடைப் பண்ணைகளுக்காகவும்,  தோட்டங்களுக்காகவும் தொடங்குகிறது. இந்த மூன்றாவது காலகட்டத்தின் ஒரு பகுதிதான் சிகோ மென்டிஸின் தலைமுறையைச் சேர்ந்த ரப்பர் வடிக்கும் தொழிலாளர்கள் சந்தித்த அவர்களது வாழ்வாதாரமான மழைக் காடுகளின் அழிவும் அதெற்கெதிரான போராட்டங்களும்.

பிரெசில் நாட்டின் அமேசான் காடுகளின் தென்மேற்குப் பகுதியில் பொலிவிய எல்லைக்கருகில் இருக்கும் ஆக்ரே மாகாணத்தின் சபூரி என்ற சிறுநகரத்தில் 1944ம் ஆண்டு டிசம்பர் 15ல் ஒரு ரப்பர் வடிக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார் பிரான்சிஸ்கோ சிகோ ஆல்விஸ் மென்டிஸ். 8 வயதில் ரப்பர் வடிக்கும் வேலை செய்யத்தொடங்கி பின்னாளில் ஒரு பெரும் தொழிற்சங்கத்தை கட்டியமைத்து இரப்பர் வடிக்கும் தொழிலாளர்களுக்கு அவர்கள் ரப்பர் வடிக்கும் காடுகளின் மீதான உரிமையைப் பெற்றுத் தந்து தனது 44 வயதில் கொல்லப்பட்டார்.

சிகோ மென்டிஸின் போராட்ட வாழ்வினைச் சொல்லும் திரைப்படமாக “The Burning Season”(1994) இருக்கிறது.  குறிப்பிடத்தக்க ஆவணப்படங்கள் “Voice of Amazon” மற்றும் “ I want to Live(Eu Quero Viver)”.  அமேசான் காடுகளின் அழிவும் அதன் பாதுகாப்பும் குறித்துப் பேசுவதன் ஒரு பகுதியாக சிகோ மென்டிஸின் வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் பிற ஆவணப்படங்களும் இருக்கின்றன. திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் தவிர ஆன்ட்ரூ ரெவ்கின் என்பவரால் எழுதப்பட்ட ”The Burning  Season.”(1990), அலெக்ஸ் ஷோமதாஃப் என்பவரின் ”The World Is Burning”, ஒரு வழக்குரைஞராக 1985ல் மென்டிஸைச் சந்தித்து அவரது மரணம் வரை சபூரி நகரத்தில் வாழ்ந்த காமர்ஷின்டோ ரோட்ரிக்ஸ் என்பவரின் “ Walking the forest with Chico Mendes” மற்றும் “Fight for the forest” இது மென்டிஸ், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட நீண்ட நேர்காணலின் புத்தக வடிவம், இது “காடுகளுக்கான ஒரு போராட்டம்” என்ற பெயரில் பேரா.ச.வின்சென்டால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

சிகோ மேன்டிஸ் தனது 44ம் வயதில்1988ம் ஆண்டு டிசம்பர் 22ம் நாள் இரவு தனது வீட்டிற்கு வெளியிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அமேசான் காடுகளைப்  பெருநிறுவனங்கள் சூரையாடாத் தொடங்கியதிலிருந்தே நடைபெற்று வந்த எண்ணற்ற கொலைகளில் ஒன்றாகவே அது உடனடியாகத் தோற்றமளித்தது. 1980களின் பிற்பகுதியிலிருந்தே உலகெங்கிலுமிருந்து அமேசான் காடுகளுக்கு வந்து செல்லும் உயிரியல் ஆய்வாளர்கள், சூழலியாளர்கள் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள் மத்தியில் அறியப்பட்டவராகவே சிகோ மென்டிஸ் இருந்தார். இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது பிரேசில் நாட்டின் எல்லைக்குள் மட்டும் ஏறத்தாழ 40 லட்சம் சதுர.கிமீ பரப்பைக் கொண்டிருந்த அமேசான் காடுகளில் அதன் அழிவிற்கெதிரான ஒரு காத்திரமான போராட்டம் அதன் எல்லைப்புறத்தில் அமைந்திருந்த ஆக்ரே பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்ததே. மேற்குறிப்பிட்டவர்கள் தான் மென்டிஸின் மரணத்தையும் அமேசான் காடுகளின் பாதுகாப்பிற்கான முக்கியத்துவத்தையும் உலகறியச் செய்து பிரேசில் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் மென்டிஸின் நெருங்கிய சகாக்களான Adrian Cowell பிரித்தானிய ஆவணப்பட இயக்குனர், Mary Helena Allegretti  சூழலியலாளர் மற்றும் அமேசான் ஆய்வுநிறுவனத்தின்(Institute for Amazonian Studies)) தலைவராக இருந்தவர், Stephan Schwartzman அமெரிக்க மானுடவியலாளர்.

அமேசானின் ரப்பர் வடிக்கும் தொழிலாளர்களிடையே இருந்த கொத்தடிமை முறை முற்றிலும் வேறானது, கொடுமையனதும் கூட. அங்கே ரப்பர் வடிப்பதைத் தவிர உணவுத் தேவைகளுக்கான எந்த உற்பத்தி நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படவில்லை. அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தையும் தங்களது முதலாளிகளிடமே, அதாவது அவர்கள் ரப்பரை எங்கு கொண்டு சேர்க்கிறார்களோ அதே கடைகளில் பெற்றாக வேண்டும், அது அவர்கள் வடிக்கும் ரப்பரின் மதிப்பில் கழித்துக் கொள்ளப்படும். அவர்கள் முதலாளிகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைக்கும் ரப்பரைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பொருட்களைக் கொடுக்கும் சில்லறை வியாபாரிகளும் அங்கே அலைவதுண்டு. ஆனால் அவ்வாறு விற்று பிடிபடும் தொழிலாளி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவான். The Burning Season திரைப்படம், 9 வயது மென்டிஸ் தனது தந்தையோடு ரப்பர் பாலை அதைச் சேகரிக்கும் சாவடியில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு வீட்டிற்குத் தேவையான பொருட்களை அவர்களிடமே பெற்றுக்கொள்ளும் காட்சியில் தொடங்குகிறது. பிறகு ஒருநாள் ரப்பரை வெளியே விற்ற தொழிலாளி ஒருவனை தீவைத்துக் கொல்லும் காட்சியை சிறுவன் மென்டிஸ் காண்கிறான்.  இளைஞனான சிகோ பிற்பாடு வில்சன் பினெய்ரோவுடன் இணைந்து தொழிற்சங்கத்தில் செயல்படுகிறார். பினெய்ரோ பண்ணை முதலாளிகளால் கொலை செய்யப்பட்ட பிற்பாடு அச்சங்கத்தின் தலைவராகிறார். ரப்பர் வடிப்போருக்கென பாதுகக்கப்பட்ட வனப்பகுதியைப் போராடிப் பெறுகிறார். மென்டிஸின் இருப்பு தமது பண்ணை மற்றும் அதற்கான காடழிப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டதை உணர்ந்த ஆல்வேஸ் என்கிற பண்ணை முதலாளி தனது மகனைக் கொண்டு மென்டிஸைக் சுட்டுக்கொல்வதோடு ஒரு நேர்கோடாகப் பயணித்து திரைப்படம் நிறைவடைகிறது.

மென்டிஸ் இறந்த மறு வருடத்தின், அதாவது 1989ன் தொடக்கத்திலிருந்தே அவரது வாழ்க்கையைப் படமாக்குவதற்கான முயற்சிகள் தொடங்குகின்றன. இந்த முயற்சிகளில் ஆரம்பத்தில் இறங்கியவர்களில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் உள்ளிட்ட நால்வர் அமெரிக்கர் மற்றொருவர் பிரித்தனைச் சேர்ந்தவரான டேவிட் பட்னம். இதில் அமெரிக்கரான பீட்டர் கூபர் அமேசான் காடுகளில் பயணித்து மென்டிஸின் மனைவியைச் சந்தித்திருக்கிறார் ஆனால் அவரின் சம்மதத்தைப் பெறமுடியாமல் போகிறது. டேவிட் பட்னம் மட்டும் தொடர்ச்சியாக முயற்சித்து 1990ல் வெளியான ஆன்ட்ரூ ரெவ்கினின் புத்தகத்திற்கும் உரிமை பெற்றார்,  மென்டிஸ் வேடத்தில் ஆண்டி கார்சியா நடிப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. கோஸ்டாரிகா நாட்டில் படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர்களான வார்னர் பிரதர்ஸ் திடீரென கைவிட்டதால் பட்னமின் முயற்சி முடிவுக்கு வந்தது.  இறுதியாக HBO நிறுவனம்1994ம் ஆண்டு இப்படத்தைத் தயாரித்தது.

மென்டிஸின் இளமைக்கால வாழ்க்கை குறித்த தகவல்கள் ஓரளவிற்கு அவரது நேர்காணல்கள் மற்றும் அவர் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. 80களின் அவரது போராட்ட வாழ்வு குறித்த தகவல்களை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த ஆவணப்படங்கள் பதிவு செய்திருக்கின்றன. தொழிற்சங்க அலுவலகத்தில் அவரது நடவடிக்கைகள், போராட்ட ஊர்வலங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு கருத்தரங்கங்களில் அவரின் பேச்சு, உள்ளூர் மக்களுடனான அவரது அன்றாட உரையாடல், அவர் வசித்த தெரு மற்றும் வீட்டில் அவரது வாழ்வு என எல்லாவற்றையும் ஆவணப்படங்கள் பதிவு செய்திருக்கின்றன. இந்த ஆவணப்படங்களால் பதிவு செய்ய முடிந்திராத இரு விடயங்கள் மென்டிஸின் இளமைக் காலமும் அவரது மரணமும், இதுதான் The Burning Season திரைப்படம் ரால் ஜூலியா என்ற நடிகரைக் கொண்டு செய்திருக்கும் கூடுதலான விடயம்.

சிகோ மென்டிஸின் ஆளுமைக்கும் பின்னாளையப் போராட்ட வாழ்விற்கும் அடித்தளமிட்ட முக்கியமான காலகட்டம் அவர் தவோரா(Euclides Fernandes Tavora) என்கிற இடதுசாரியோடு பழகிய நாட்கள். இத்திரைப்படமும் பிற ஆவணப்படங்களும் இது குறித்து அதிகம் பேசுவதில்லை. மென்டிஸ் கூட தனது நேர்காணல்களில் தவோரா பற்றிச் சொல்லும்போது 18 வயது வரை எழுத்தறிவில்லாதிருந்த தனக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் என்பதிற்கு மேல் பெரிதாக எதுவும் குறிப்பிடுவதில்லை. இருந்தாலும் மென்டிஸின் உடனிருந்தவர்கள் அவர் இறுதிவரை தவோராவின் மீது நல்ல மரியாதை வைத்திருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். அமெரிக்க இடதுசாரியும் பத்திரிக்கையாளருமான அலெக்சாண்டர் காக்பர்ன் சுசானா ஹெய்ஸ்டுடன் இணைந்து எழுதிய “The Faith of the forest” என்ற புத்தகத்தில் மென்டிஸ் வாழ்ந்த அந்த ஆக்ரே மாகாணத்தின் இடதுசாரிகளின் போராட்ட மரபு குறித்தும் அதில் மென்டிஸ் ஊக்கம் பெற்ற இடதுசாரியான தவோராவின் பங்களிப்பு குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார்கள். The Burning Season திரைப்படம் சிறுவன் மென்டிஸையும் அவனது தந்தையையும் தவோரா சந்திப்பதிலிருந்தே தொடங்குகிறது. காக்பர்னின் பதிவுகளின்படி இது நடந்தது 1962 அதாவது மென்டிஸின் 18வது வயதில், மென்டிஸும் தான் தவோராவைச் சந்திக்கும்போது தனக்கு 18 வயதிருக்கும் என்றே குறிப்பிடுகிறார், அதுவரையிலும் அவர் எழுத்தறிவில்லாதவராகவே வாழ்ந்திருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் அவரை ஒரு 10 வயது சிறுவனாக தவோரவைச் சந்திப்பதைக் காட்டியிருக்கிறார்கள். படத்தில் தவோராவின் போராட்ட வாழ்வு குறித்த சித்தரிப்புகளோ உரையாடல்களோ இல்லை. தவோரா, ஜெதூலா வார்கஸின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடிய லூயிஸ் கார்லோஸ் ப்ரேஸ்தஸ், பின்னாளில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர், உடன் இருந்தவர். ப்ரேஸ்தஸ் பிரேசிலின் விவாசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டும் நோக்கில் 1924ல் தொடங்கி மூன்று ஆண்டுகள் மேற்கொண்ட 14000 மைல்கள் நெடிய நடைபயணத்தில் பங்கெடுத்தவர். அவரோடு ஒன்றாக சிறைபிடிக்கப்பட்டவர், பிற்பாடு சிறையிலிருந்து தப்பி ஆக்ரே பகுதியில் தலைமறைவாய் வாழும்போதுதான் மென்டிஸுக்கு அறிமுகமானார். வாரத்தின் இறுதிநாட்களில் 4 மைல்கள் நடந்து சென்று தவோராவின் குடிலில் தங்கி விடுவார் மென்டிஸ். பிரேசிலின் அரசியல் நிலைமைகள் குறித்த விவாதங்கள் செய்தித்தாள்கள் மற்றும் சர்வதேச வானொலிகள், குறிப்பாக மாஸ்கோ வானொலி, செய்திகளை முன்வைத்து நடக்கும் என்று மென்டிஸ் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். 1964ல் தொடங்கிய ராணுவ ஆட்சிக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து தவோரா அப்பகுதியை விட்டு நீங்கினார். பிற்பாடு தவோராவிற்கு என்ன நேர்ந்தது என்பதை மென்டிஸ் அறிந்திருக்கவில்லை. காக்பர்னின் குறிப்புகளின் படி மென்டிஸ்  தவோராவின் பாதிப்பிலிருந்து பின்னாளில் முற்றிலுமாக விலகியவராக இருந்ததையே குறிப்பிடுகிறார். மென்டிஸின் போராட்டங்களை அரசு நேரடியாகத் தலையிட்டு ஒடுக்க வேண்டி அவர் சோவியத்தின் உதவியோடு ஒரு ஆயுதப்போராட்டதிற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்பதான வதந்திகள் சபூரியின் பண்ணை உரிமையாளர்களால் கிளப்பி விடப்பட்டன. இந்தப் பின்னணியில் மென்டிஸின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். இருந்தாலும் மென்டிஸ் மார்க்சியம் மற்றும் கத்தோலிக்க விடுதலை இறையியலின் தாக்கம் பெற்றவராகவே வாழ்ந்திருக்கிறார், இவ்வாறே ஆன்ட்ரூ ரெவ்கின்னும் சித்தரிக்கிறார்.

மென்டிஸின் வாழ்வில் மற்றொரு முக்கியமான நபர் வில்சன் பினெய்ரோ, இவரிடமிருந்தே மென்டிஸ் கத்தோலிக்க இறையியலின் தாக்கம் பெற்றிருக்கக் கூடும். பினெய்ரோ 1970களின் ஆரம்பத்தில் ரப்பர் பால் வடிப்போர் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர். மென்டிஸ் அப்போது தொழிற்சங்க செயலாளராக இருந்தார். பினெய்ரோவின் தொழிற்சங்க செயல்பாடுகள் அதிகமும் உள்ளூர் கத்தோலிக்க தேவாலயங்களோடு இணைந்ததாகவே இருந்தன. தொழிற்சங்க நடவடிக்கைகளின் முக்கியமான உரையாடல்கள் மற்றூம் விவாதங்கள் தேவாலயங்களிலேயே நடந்தன, திரைப்படமும் ஆவணப்படங்களும் இதைப் பதிவு செய்திருக்கின்றன.

உண்மையில் மென்டிஸ் புரட்சிகர இடதுசாரி அடையாளம் மற்றும் அத்தகைய இயக்கங்களிலிருந்து விலகியிருக்கவே விரும்பினார். இரப்பர் வடிக்கும் தொழிலாளர்களுக்கு எழுத்தறிவும் அவர்கள் தொடர்ந்து பிழைப்பதற்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அரசிடம் பெற்றுத் தருவதுமே அவரது முக்கிய இலக்குகளாயிருந்தன. ஒரு சூழலியல் போராளியாக அவர் அடையாளப்படுத்தப்பட்டதும் இதன் உடன்விளைவுதான். The Burning Season திரைப்படத்தில் ஒரு காட்சியில் மென்டிஸ் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சி வங்கியின் மாநாட்டில் பேசுவதற்கு வாஷிங்க்டன் வந்துசேர்கிறார். பத்திரிக்கையாளர்கள் அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் விருது பற்றி கேட்கின்றனர். அது குறித்து எதுவும் அறிந்திராத மென்டிஸ் தான் இரப்பர் வடிப்போரின் உரிமைகளுக்குப் போராடியதற்கா இந்த விருது என்று அவர்களிடம் திரும்பிக் கேட்கிறார், அவர்கள் “ இல்லை.. நீங்கள் அமேசான் காடுகளைக் காப்பாற்ற போராடியதற்கு” என்று பதிலளிக்கிறார்கள்.

இப்படம் கவனம் கொள்ளும் காலமும்,  இடமும் அமேசான் காடுகளில் கால்நடை வளர்ப்பு மற்றும் சாலை வசதிகளுக்காக காடழிப்பு நடைபெறும் காலகட்டமாக இருக்கிறது. ஆனால் மரங்களைக் கட்டித்தழுவி அறவழியில் போராடுபவர்களுக்கும் மரம் வெட்டும் மற்றூம் கால்நடைப் பண்ணைகளின் தொழிலாளர்களுக்குமிடையிலான முரண்பாடு குறித்த உரையாடல்கள் எதுவும் இப்படத்தில் இல்லை. இந்த இரு தரப்பும்தான் அதிகமாக ஒருவரையிருவர் எதிர்கொள்கின்றனர். மாறாக இரப்பர் வடிப்போருக்கும் ஆல்வேஸ் போன்ற கால்நடைப் பண்ணை முதலாளிகளுக்குமான நேரடி மோதலாக மட்டுமே இப்போராட்டம் சித்தரிக்கப்பட்டிற தொனி மேலோங்கியிருக்கிறது.

ஆக்ரே பகுதியின் தொழிற்சங்க வரலாற்றில் பல முக்கியமான தருணங்களில் குறிப்பிடத்தக்கதான 130 தோட்ட முதலாளிகள் வேலைநீக்கம் செய்து வெளித்தள்ளிய 1  லட்சம் தொழிலாளர்களோடு ஆக்ரே மாகாணத்தில் மென்டிஸ் நடத்திய மிகப்பெரும் பேரணி, 1985ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொழிற்சங்க மாநாடும் அவர்கள் வெளியிட்ட “ வனவாழ் மக்கள் அறிக்கை” போன்றவற்றை ஆவணப்படங்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆனால் இவை திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

சிகோ மென்டிஸ் உண்மையிலேயே சாதித்தது ரப்பர் வடிப்போர், பூர்வகுடி இந்தியர்கள், சூழலியாலளர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஓரணியில் திரட்டியதுதான். ஆக்ரே மாகாணத்தின் பெரும்பாலான இரப்பர் வடிப்போர் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வறட்சியான வடகிழக்குப் பிரேசிலில் இருந்து குடியமர்த்தப்பட்டவர்கள். அரை நூற்றாண்டாக இருந்த பூர்வகுடி இந்தியர்களுக்கும் இரப்பர் வடிப்போருக்குமான முரண்பாடு மென்டிஸின் முயற்சியால் ஓரளவிற்கு மட்டுப்பட்டது. ரியோ நகரத்தில் மென்டிஸும் ஒரு பூர்வகுடி இந்தியரும் தீப்பந்தம் ஏந்தி தலைமை தாங்கிய ஒரு பேரணியின் முடிவில் ஓடிவரும் இருவரும் ஒருசேர  அந்தப் பந்தத்தை நீரில் ஆழ்த்தி அணைக்கும் காட்சியை  “Voice of Amazon” பதிவு செய்திருக்கிறது. இது காடழிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டின் மழைக்காலத்திற்கு முன்பும் அமேசான் பற்றியெரிவதைத் தடுக்கும் ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுக்கப்பட்டது, அதே வேளையில் இந்தப் போராட்டத்தில் பூர்வகுடி இந்தியர்களின் பங்கெடுப்பையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டியது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைப் பெறுவதில் 1985க்குப் பிற்பாடு மென்டிஸின் போராட்டம் வெற்றிபெற்றது. இது பண்ணை உரிமையாளர்களின் அச்சத்தையும், தொழிற்சங்கத்தின் மீதான கோபத்தையும் அதிகப்படுத்தியது. டேரில் ஆல்வேஸ் இதில் முக்கியமானவர். பிரேசிலின் பரனா மாகாணத்திலிருந்து ஒரு கொலைக் குற்றத்திற்கான தண்டனைக்குத் தப்பி ஆக்ரேயின் சபூரி பகுதியில் குடியேறியவன். 1985ல் தொடங்கப்பட்ட நிலச்சீர்திருத்தங்களுக்கு எதிரான வலதுசாரி அமைப்பான UDR(União Democrática Ruralista)ல் செயல்பட்டவன். காடுகளுக்குத் தீயிடுதலை எதிர்த்து மென்டிஸ் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களில் அவருக்கு எதிராகத் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தவன்.  பின்னாளில் ஆல்வேஸின் கடந்தகாலம் பற்றி அறிந்துகொண்ட மென்டிஸ் காவல்துறைக்கு கொடுத்த நெருக்கடி பரனா நீதிமன்றம் ஆல்வேஸ் சரணடைய ஆணை பிறப்பிப்பதில் போய் முடிகிறது. தலைமறைவான ஆல்வேஸ் மென்டிஸை கொன்ற பிறகே வழக்கை எதிர்கொள்ள முடிவு செய்கிறான். மழைக்காலம் தொடங்குகிறது ஆண்டின் நீண்ட இரவைக் கொண்ட டிசம்பர் 22ம் நாள் இரவு ஆல்வேஸின் கையாள் மென்டிஸை மிகக்குறைந்த தூரத்தில் நின்று நெஞ்சில் சுட்டுவிட்டு தப்புகிறான். The Burning Season படத்தில் மென்டிஸை ஆல்வேஸின் மகன் டார்சி சுட்டுக் கொல்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது, உண்மையில் மென்டிஸின் கொலைகாரர்களை நேரில் யாரும் பார்க்கவில்லை. ஆனாலும் டார்சி இதற்கு முன்பு சில நாட்களாகவே அப்பகுதியைச் சுற்றித் திரிந்ததை மென்டிஸிடம் அவரது சகாக்கள் எச்சரித்திருந்தனர். ஓராண்டிற்கு முன்பிருந்தே அவருக்கு ஆயுதமேந்திய காவலர் மூவர் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தனர். மெண்டிஸ் கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவரைச் சந்தித்த காமர்ஷின்டோ ரோட்ரிக்ஸ் தனது குறிப்புகளில்  அன்று மாலை ஒரு காவலன் உணவருந்த தனது கூடாரத்துக்குத் திரும்பிவிட மற்ற இருவரும் அவரோடு வீட்டில் தாயக்கட்டை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர் சுடப்பட்டவுடன் அவர்கள் இருவரும் ஒடி மறைந்து விட்டனர். இப்படத்தில் இந்த விடயங்களெல்லாம் சொல்லப்படவில்லை, மாறாக தனது மரணத்தை அறிந்தவராக அதை எதிர்நோக்கியே தனது குழந்தைகளுக்குப் பரிசளித்துவிட்டு குளிப்பதற்காக வெளியேறும்போது சுடப்படுவதாக படமாக்கப்பட்டிருக்கிறது.

The Burning Season படமானது அறப்போராட்டத்தை வழிமுறையாகத் தேர்ந்து கொண்ட ஒரு சூழலியலாளராகவே மென்டிஸை முன்னிறுத்துகிறது. உண்மையில் இதை அவர் விருப்பத்துடன் தேர்ந்துகொண்டார் என்று சொல்லமுடியாது, உலகெங்கிலுமுள்ள சூழலியலாளர்களின் கவனம் மென்டிஸின் மீது விழுந்தது. இந்த அக்கறையைப் பயன்படுத்திக் கொண்டு ஐ.நா அவை மற்றும் அமெரிக்க ஆதரவை அவரால் பெறமுடிந்தது. இது பிரேசில் அரசாங்கத்தை சில நேர்மறையான முடிவுகள் எடுப்பதைத் துரிதப்படுத்தியது. சிகோ மென்டிஸ் லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியிலும் அவரின் இறப்பிற்கு முன்னமே அறியப்பட்டவராகவே இருந்தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது உலகெங்கிலும் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களே. மென்டிஸின் மார்க்சியப் புலமை குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை, அவர் அதிகம் எழுதியவரும் இல்லை. எழுத்தறிவற்ற பெரும்பான்மைத் தொழிலாளர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை வென்றெடுக்கும் இலக்கிற்கு சூழலியல் அரசியலைத் தேர்ந்துகொண்ட மென்டிஸ், ஆரம்பகாலத்தில் தொழிற்சங்க கட்டமைப்புகளுக்கு மட்டும் அதிகமும் பயன்படுத்திய தனது இடதுசாரி அரசியலைப் பின்னாளில்  தேர்ந்துகொள்ளவில்லை. தவோரா அவரை விட்டு நீங்கிய பிறகு மெல்ல மெல்லத் தனது இடதுசாரி அடையாளத்தைத் தொலைத்து விட்டவராகவே இருந்திருக்கிறார். இருந்தாலும் அமேசான் காடுகளில் அவர் தலைமையேற்று நடத்திய இப்போராட்டங்கள் உழைக்கும் மக்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவர் அமேசான் காடுகளின் தொன்மக் கதைகளில் தோய்ந்து போன ஒரு இரப்பர் வடிக்கும் தொழிலாளியாகவே இறுதி வரை இருந்தார். இப்படத்தின் தொடக்கத்தில் அமேசானின் தொல்கதைகளில் குறிப்பிடப்படும் காடுகளைக் காவல் காக்கும் குருபிரா(Curupira) என்ற சிறுவனைப் பற்றி தவோராவிடம் சிறுவயது மென்டிஸ் விவரிக்கிறார். அவன் பாதங்கள் மட்டும் பின்புறமாக(180 பாகை) திரும்பியிருக்கிற கால்களை உடையவன், அவனைப் பின்தொடர முயற்சிப்பவர்கள் அவன் போன திசைக்கு எதிர்திசையில் போய்விடுவர் மேலும் அவன் வனபடு பொருட்கள் அளவோடு எடுக்கப்படுகிறதா இல்லையா என நமக்கே அறியாமல் சோதித்துக் கொண்டிருப்பவன் என்பதாக இருக்கிறது அக்கதை. இறுதிக் காட்சியில் தனது மகளுக்கு குருபிராவின் மரச்சிற்பம் ஒன்றை தான் இறப்பதற்கு முன் மென்டிஸ் பரிசளிக்கிறார்.

மென்டிஸ் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படங்களை ஒப்பிடும்போது The Burning Season படம் அவரது ஆளுமையை அவ்வளவு அசலாகச் சித்தரித்த படம் என்று சொல்லமுடியாது. முக்கியமாக இப்படம் அமேசானில் படமாக்கப்படவில்லை மாறாக மெக்சிகோவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நடித்த ஒரேயொரு பிரேசிலியர் நடிகை சோனியா ப்ரகா,  மற்ற அனைவரும் ஸ்பானிய அமெரிக்கர்கள் உள்ளிட்ட பிற அமெரிக்கர்கள். சிகோ மென்டிஸாக நடித்திருக்கும் ரால் ஜூலியா போர்டோரிகோ நாட்டில் பிறந்தவர். இப்படம் எடுக்கப்படும்போதே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ரால் ஜூலியா அமெரிக்கா சென்று சிகிச்சைக்குப்பின் திரும்பி வந்து மிகுந்த சிரத்தையுடன் மீதிக் காட்சிகளில் நடித்து முடித்தார்.  இரைப்பை புற்று நோயால் அவர் அவதிப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் வெளியான மூன்றாவது வாரத்தில் அவர் மரணமடைந்தார். குறுந்தொடர்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்படும் படங்கள் பிரிவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அவரது மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.

சிகோ மென்டிஸை ஒரு தொழிற்சங்கவாதி என்ற ஒற்றை அடையாளத்தில் குறுக்கிவிட முடியாது. அவர் மிகவும் தாமதமாக எழுத்தறிவு பெற்ற, தனது வாழ்நாளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு காலம் வரை எழுத்தறிவில்லாதிருந்த, ஒரு இடதுசாரி. இலத்தீன் அமெரிக்காவின் புரட்சிகர இடதுசாரி மரபு குறித்த புரிதலுள்ளவர். மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட பிரேசிலின் இடதுசாரிகள் நடத்திய அராகுவாயா(Araguaia) கெரில்லா போரில்(1966-75) பங்குபற்றிய பெண் போராளி ஒருவரின் பெயரைத் தனது மகளுக்கும்(Elenira), நிகரகுவாவின் சான்டினிஸ்ட்களுக்கு ஆதர்சமாக இருந்த புரட்சியாளர் அகஸ்டோ நிகோலஸ் சான்டினோவின் பெயரை மகனுக்கும்(Sandino)இட்டிருந்தார்.

சிகோ ஒருமுறை சொன்னார் “ எனது மரணம் இந்த போராட்டத்தை முன்னகர்த்துமானால் எனது சாவு அதற்கு பெறுமானமுள்ளதே. ஆனால் வரலாற்றுப் படிப்பினைகள் வேறாக இருக்கிறது. நான் வாழ்ந்தாக வேண்டும். வெறும் உணர்ச்சி வெளிப்பாடுகளும், சவ அடக்கங்களும் இந்த காடுகளை(அமேசான்) காப்பாற்றிவிடாது”

ஆதாரங்கள்:

  1. Chico Mendes-Fight for the Forest_ Chico Mendes in His Own Words -Inland Book Co (1990)
  2. Gomercindo Rodrigues-Walking the Forest with Chico Mendes_ Struggle for Justice in the Amazon (2007)
  3. Susanna B. Hecht, Alexander Cockburn-The Fate of the Forest_ Developers, Destroyers, and Defenders of the Amazon, Updated Edition-University Of Chicago
  4. Chico Mendes: Chronicle of a Death Foretold, Susanna Hecht, New Left Review, I/173, Jan-Feb 1989.
  5. காடுகளுக்கான ஒரு போராட்டம்: சிக்கோ மென்டிஸ்(மொழியாக்க நூல்), பேரா.ச.வின்சென்ட், எதிர் வெளியீடு,2014.

 

 

Comments are closed.